இமயப் பள்ளத்தாக்குகளில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ரோடோடென்ட்ரான் வகைகள். லில்லிகளும் ஆர்க்கிட்களும் மலர்கின்றன. அவற்றுள் அரசன் ஹிமகமலம், பனித் தாமரை. ஒரு நாள் இரண்டு பாறைகளுக்கு இடையே, பனியில் பாதி புதைந்த நீலத் தாமரையைக் கண்டேன். தனியாக இருக்கிறாயே, உன் அழகு வணங்கப்பட வேண்டும் என்றேன். காற்று அதன் தண்டை அசைத்தது. தனிமை என்றால் எல்லாம் ஒன்றில் இருப்பது. இந்த உயரத்தையும் தூய்மையையும் நான் ரசிக்கிறேன் என்று அது பேசியது. இதழ்களை நொறுக்கினால் என்ன ஆகும் என்றேன். நறுமணம் பரவும். என் வாழ்வின் நோக்கம் நிறைவேறும் என்றது. வேருடன் பிடுங்கி ஆசானிடம் கொண்டு சென்றேன். அவர் மகிழவில்லை. அன்று முதல் ஒரு மலரையும் பறிக்கவில்லை. அழகை அனுபவிக்க வேண்டும். உரிமை கொள்ளவோ அழிக்கவோ கூடாது.